This translation may not reflect the changes made since 2004-01-17 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

The GNU Manifesto

GNU என்றால் என்ன? Gnu's Not Unix!

யூனிக்ஸுடன் ஒத்தியலும் கனு (GNU - short for Gnu's Not Unix) என்னும் மென்பொருளை நான் மற்றவர்களுக்குச் சுதந்திரமாக வழங்கும் நோக்கத்துடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இதில் எனக்கு பலர் உதவுகிறார்கள். நேரம், பணம், நிரலிகள் (programs), சாதனங்கள் போன்றவைகளின் வடிவிலான உதவிகள் எங்களுக்கு மிகவும் தேவை.

இதுவரை Lispஇல் கட்டளைகளை எழுதக்கூடிய திறனுடைய Emacs text editor, ஒரு source level debugger, ஒரு yacc-compatible parser generator, ஒரு linker மற்றும கிட்டத்தட்ட 35 நிரலிகள் எங்களிடம் உள்ளன. ஒரு shell முடிவடையும நிலையில் உள்ளது. ஒரு C தொகுப்பி (compiler) தன்னைத்தானே தொகுத்து விட்டது, அடுத்த வருடம் அதை வெளியிட்டுவிடுவோம். ஒரு கரு (kernel) ஆரம்ப நிலையில் உள்ளது. கருவையும் தொகுப்பியையும் முடித்த பிறகு கனுவை நிரலிகள் எழுதுவதற்கு விநியோகம் செய்யலாம். TeXஐ உரை வடிவமைப்புக்கு உபயோகிக்கலாம். சுதந்திரமான X window systemஐயும் உபயோகித்துக் கொள்வோம். இதன் பின் Common Lisp, ஒரு Empire விளையாட்டு, ஒரு விரிதாள் (spreadsheet), மற்றும் நூற்றுக்கணக்கான மற்ற பல நிரலிகளைச் சேர்ப்போம். இதற்கான ஆவணங்களையும் (documentation) சேர்த்துக் கொள்வோம். இறுதியில் யூனிக்ஸுடன் வரும் அனைத்து உபயோகமுள்ள நிரலிகளையும் நாங்கள் வழங்குவோம்.

கனுவில் யூனிக்ஸ் நிரலிகளை இயக்க முடியும், ஆனால் முற்றிலும் அதே போல இருக்காது. மற்ற இயங்கு தளங்களில் (Operating system) உள்ள எங்களது அனுபவத்தின் அடிப்படையிலும், நமது வசதிக்கேற்பவும் மாற்றங்கள் செய்கிறோம். குறிப்பாக, நீளமான கோப்பின் பெயர்கள், கோப்பின் பதிப்பு எண்கள், முறியாக் கோப்பு முறைமை, கோப்புப் பெயர் நிரைவேற்றல், terminal-independent display மற்றும் lispஐ அடிப்படையாகக் கொண்ட சாளர முறைமை (window system) ஆகியவற்றைச் செய்கிறோம். C மற்றும் Lisp மொழிகள் அமைப்பு நிரலாடலுக்கு (system programming) உபயோகிப்போம். UUCP, MIT Chaosnet மற்றும் இணைய நெறிமுறைகளைத் தகவல் தொடர்பிற்கு உபயோகிப்போம்.

மெய்நிகர நினைவகம் உடைய 68000/16000 வகை கணினிகளில், கனு முதலில் இயங்கும், ஏனென்றால் அதில் இயங்கவைப்பதற்கு எளிதாக இருக்கும். சிறிய கணினிகளில் இயங்க வைப்பதைத் தேவையானவர்கள் செய்துகொள்ள விட்டு விடுவோம்.

இந்த செயல்திட்டத்தின் பெயரை உபயோகிக்கும் பொழுது, GNU என்னும் வார்த்தையில் G யை உச்சரியுங்கள்.

நான் ஏன் கனுவை எழுத வேண்டும்?

எனக்குப் பிடித்த நிரலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஒரு சீரிய முறை, என்பது எனது கருத்து. மென்பொருள் விற்பவர்கள் மென்பொருள் பயனாளர்களுக்குள் பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதில்லை. இதன் மூலம் மென்பொருள் பயனாளர்களைப் பிரித்து, அவர்கள் விற்பவர்களின் தயவில் வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது போல மற்ற மென்பொருள் பயனாளர்களிடம் இருந்து தனிமைப் படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. மனசாட்சிக்கு விரோதமாக என்னால் NDAவிலோ (Non-Disclosure Agreement) அல்லது மென்பொருள் உரிம ஒப்பந்தத்திலோ கை எழுத்து இட முடியாது. MITயின் Artificial Intelligence ஆய்வகத்தில் இது போன்ற மனோபாவங்களை எதிர்த்தேன், ஆனால் கை நழுவி விட்டது: எனக்குப் பிடிக்காதவற்றை எனக்குச் செய்யும் ஸ்தாபனத்தில் என்னால் இருக்க முடியவில்லை.

கணினிகளை எனக்கு அவமதிப்பில்லாத வகையில் உபயோகிக்கப் போதுமான தளையறு மென்பொருளை (Swatantra Software or Free Software) எழுத முடிவு செய்திருக்கிறேன். இதனால் எனக்குச் சுதந்திரம் தராத மென்பொருளை உபயோகிக்க வேண்டியது இருக்காது. கனுவைப் பகிர்ந்து கொள்வதைச் சட்டபூர்வமாக மறுக்கும் உரிமையை MITக்கு நிராகரிக்க நான் MIT AI ஆய்வகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.

ஏன் யுனிக்ஸோடு கனு ஒத்துப்போகிறது(compatible)?

என்னைப் பொருத்தவரை, யுனிக்ஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குதளம் (Operating System) கிடையாது, ஆனால் அது மிகவும் மோசம் இல்லை. யுனிக்ஸின் அடிப்படை அம்சங்கள் சிறப்பாக உள்ளன. மேலும், யுனிக்ஸைக் கெடுக்காமல் அதை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன் (மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு : கனுவை எழுத அரம்பித்த பொழுது, யூனிக்ஸ்தான் பெரிதும் உபயோகத்தில் இருந்தது).

கனு எப்படிக் கிடைக்கும்?

கனு public domainல் இல்லை. எல்லோரும் கனுவை மாற்றவும், பரிமாறவும் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் பரிமாறுபவர்கள் மீண்டும் தடை விதிக்க முடியாது. அதாவது, தனியுரிமை (proprietary) மாற்றங்கள் அனுமதிக்கப்பட மாட்டா. கனுவின் எல்லா பரிமாணங்களிலும் இந்தச் சுதந்திரங்கள் இருக்க நான் தேவையான எச்சரிக்கைகளை எடுத்திருக்கிறேன்.

ஏன் மற்ற நிரலாளர்கள் (programmers) உதவுகிறார்கள்

பல நிரலாளர்கள் கனுவில் ஆர்வம் காட்டுகிறார்கள். உதவவும் விரும்புகிறார்கள்.

பல நிரலாளர்கள், மென்பொருளில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரும்பவில்லை. அத்தடைகள் நிரலாளர்களை இலட்ச லட்சமாகச் சம்பாதிக்க உதவலாம், ஆனால் அத்தடைகள் அவர்களை ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாகக் கருத விடுவதில்லை. நிரலாளர்களுக்குள் நட்பை வெளிப்படுத்தும் அடிப்படையான செயல், நிரல்களைப் பகிர்ந்துகொள்வதுதான்; இப்போது உள்ள வியாபார அமைப்புகள், நிரலாளர்களைத் தங்களுக்குள் நண்பர்களாகக் கருத விடுவதில்லை. மென்பொருள் வாங்குபவர்கள் நட்பு அல்லது சட்டம, இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுவாக, நட்புதான் முக்கியம் என்று பலர் முடிவு செய்கிறார்கள். ஆனால் சட்டத்தைப் பின்பற்ற நினைப்பவர்கள், இரண்டிலும் திருப்தி அடைவதில்லை. அவர்களுக்கு மற்றவர்களின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கையின்மை ஏற்படுகின்றது. மேலும், நிரல் எழுதுவதை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக கருதிவிடுகிறார்கள்.

கனுவை உருவாக்கி அதை உபயோகித்தால் நாம் எல்லோருடனும் ஒற்றுமையாகவும் சட்டத்தை மீறாமலும் இருக்கலாம். மேலும் கனு, மென்பொருளைப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு உத்வேகமாகவும் ஒரு முன்மாதிரியாகவும் திகழும். தனியுரிம (proprietary) மென்பொருள் உபயோகித்தால், சுதந்திர மென்பொருள் உபயோகிக்கும்பொழுது கிடைக்கும் ஒற்றுமையுணர்வு கிடைக்காது. நான சந்தித்த பல நிரலாளர்களுக்குப், பணத்தால் ஈடு செய்ய முடியாத மகிழ்ச்சியை இதுவே தரும்.

நீங்கள் எப்படி உதவலாம்?

நான் கணினி உற்பத்தியாளர்களிடம் பணம் மற்றும் கணினியின் மூலம் நன்கொடைகள் கேட்கிறேன். தனி நபர்களிடமிருந்து நன்கொடையாக உழைப்பு மற்றும நிரல்களைக் கேட்கிறேன்.

கணினியை நன்கொடையளிப்பதனால் ஒரு விளைவு, அந்த கணினிகளில் கனு சீக்கிரமாக செயல்படும். நன்கொடையாக அளிக்கப்படும் கணினிகள் உபயோகத்திற்கு ஏற்கனவே தயாராக இருக்க வேண்டும். மேலும, அதை உபயோகிப்பதற்குத் தனிப்பட்ட குளிரூட்டும் இயந்திரங்கள் தேவைப் படக்கூடாது.

பல நிரலாளர்கள் கனுவிற்குப் பகுதி நேரப் பங்களிப்பில் ஆர்வமாக இருப்பதை நான் பார்க்கிறேன். பல செயல்திட்டங்களுக்கு இத்தகைய பகுதிநேர உழைப்பால் உருவாக்கபட்ட நிரலிகளை ஒன்றாக இயங்க வைக்க முடியாது. ஆனால் யூனிக்ஸை ஒவ்வொரு பாகமாக மாற்றம் செய்வதில் இந்தப் பிரச்சனை கிடையாது. ஒரு யூனிக்ஸ் அமைப்பில் பல நூற்றுக்கணக்கான நிரலிகள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள் (documentation) உள்ளன. அவற்றின் இடைமுகக் குறிப்புகள் (interface specifications) யூனிக்ஸ் ஒத்தியல்பால் (compatibility) தீர்மானிக்கப்பட்டவை. ஒவ்வொரு பங்களிப்பாளரும் யூனிக்ஸில் உள்ள நிரலிக்கு ஈடாக நிரல் எழுதி அதன் இடத்தில் சரியாக இயங்க வைத்தால், அவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும்பொழுது சரியாக இயங்கும். Murphyயின் கூற்றினால் சில எதிர்பாராத பிரச்சனைகள் வந்தாலும் இந்த இணைப்பு இயன்றதே.

நன்கொடைகள் கிடைத்தால், சில நிரலாளர்களை கனுவில் நிரல் எழுத வைத்துக்கொள்வோம். மற்ற மென்பொருள் எழுதும் உத்தியோகங்களைவிட ஊதியம் குறைவாகத்தான் இருக்கும், ஆனால் சமூக ஒற்றுமையை, பணம் சம்பாதிப்பதற்கு ஈடாகக் கருதுபவர்களை நான் எதிர்பார்க்கிறேன். தன்னை இதற்காக அர்ப்பணம் செய்ய விரும்புவர்கள், தங்களுடைய முழு சக்தியையும் கனுவில் செலுத்த இந்த உத்தியோகங்கள் உதவும்.

எப்படி எல்லா கணினி பயனாளர்களும் பயன் அடைவார்கள்?

கனுவை எழுதிய பிறகு எல்லோருக்கும் இயங்குதள மென்பொருள் (Operating system software) காற்றுபோல எளிதாகக் கிடைக்கும்.

இதன் விளைவு எல்லொருடைய யூனிக்ஸ் உரிமத்தை மிச்சப்படுத்துவதை விட மேலானது - தேவையில்லாமல் திரும்பத்திரும்ப அதே இயங்குதள நிரலிகள் எழுதுவதைத் தவிர்க்கலாம். இந்த உழைப்பைத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் செலுத்தலாம்.

முழு இயங்குதளத்தின் ஆணைமூலம் (source codes) எல்லோருக்கும் கிடைக்கும். இதனால், யாருக்காவது இயக்க முறைமையில் மாற்றம் வேண்டுமென்றால், அவரவராக அதைச் சுதந்திரமாகச் செய்துக்கொள்ளலாம், அல்லது எந்த நிரலாளரையும் பணியில் அமர்த்தி மாற்றிக்கொள்ளலாம். மென்பொருள் பயனாளர்கள் ஒரு நிரலாளர் அல்லது ஒரு நிறுவனத்தின் தயவில் வாழ வேண்டிய அவசியம் இருக்காது.

பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு ஆணைமூலங்களைப் படிப்பதற்கும் அதை மேம்படுத்துவதற்கும் பயிற்சியளிக்கும் நல்லதொரு பயிற்சி மையமாக அமையலாம். Harvard கணினி மையம், முன்பு எந்தவொரு நிரலையும் அதன் ஆணைமூலங்களைப் பகிரங்கமாக வெளியிடாவிட்டால், அதனை நிறுவப் (install) போவதில்லை என்ற கொள்கை வைத்திருந்தனர். நான் அதைக் கண்டு மிகவும் ஊக்கம் அடைந்தேன்.

கடைசியாக, யார் இயங்குதள மென்பொருளை உரிமை கொண்டாடுவது, அதைவைத்து ஒருவர் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது போன்ற தொல்லைகள் இருக்காது.

மக்கள் ஒரு நிரலிக்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது, அதன் நகல்களை உரிமம் செய்வது போன்ற பல விஷயங்களைத் தீர்மானிக்கும் முறை என்றுமே சமுதாயத்திற்குப் பல விதமாகச் செலவுகளைக் கொடுக்கிறது. காவல்துறை மட்டுமே அனைவரும் அதற்களுக்குக் கீழ்படிவதை நடைமுறைப்படுத்த முடியும். உதாரணமாக, விண்வெளி நிலையம் அமைத்து அதில் மக்கள் வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு லிட்டர் காற்றுக்கும், விலை நிர்ணயிப்பது நியாயமானது தான். ஆனால் அதற்கு அவர்கள் காற்று அளவையை முகமூடி போல முகத்தில் மாட்டிக் கொண்டு இரவும் பகலும் அலைவது பொறுக்க முடியாத ஒன்று. அது மட்டுமின்றி எல்லா இடங்களிலும் புகைப்படம் பிடிக்கும் கருவியை வைத்து நீங்கள முகமூடியை அகற்றுகிறீர்களா என்று கண்காணிப்பது கொடுமையானது. அதற்குப் பதில் அந்த இடத்திற்கு மொத்தமாக ஒரு வரி நிர்ணயித்து முகமூடிகளை தூக்கியெறிந்துவிடலாம்.

சுவாசிப்பதைப் போல, ஒரு நிரலியின் அனைத்து அல்லது சில பகுதிகளை படி எடுத்தல் இயற்கையானதே. அது அந்த அளவு சுதந்திரமாக இருக்க வேண்டியது.

கனுவின் குறிக்கோள்களுக்கு எதிராகக் கூறப்படும் சில வாதங்கள்

“இலவசமாகக் கிடைத்தால் யாரும் உபயோகிக்க மாட்டார்கள்.”

“சேவை அளிக்க வேண்டுமென்றால் அதற்குக் காசு வசூல் செய்துதான் ஆக வேண்டும்.”

இலவசமான கனுவை விட கனுவுடன் கட்டணச் சேவையைப் பொது மக்கள் விரும்பினால், வெறும் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கலாம் வெறும் கைப்பிடித்து உதவியளிக்கும் சேவையையும், நிரலில் மாற்றங்கள் செய்யும் சேவையையும் நாம் வித்தியாசப்படுத்த வேண்டும். இரண்டாவது விதமான சேவையை மென்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. உங்களைப்போல பலருக்கு அதே மாற்றம் தேவையில்லை என்றால் மென்பொருள் விற்பனையாளன் செய்து தர மாட்டான்.(1)

உங்களது நிறுவனத்திற்கு நம்பகமான சேவை தேவை என்றால், அந்த மென்பொருளின் மூலக குறிமுறைகள் மற்றும் அதற்கான சாதனங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இருந்தால் நீங்கள் ஒரு நிரலாளரை வைத்து, நிரலில் உங்களது மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். யூனிக்ஸ் மூலகக் குறிமுறைகளின் விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலான நிறுவனங்களுக்கு இது இயலாத ஒன்று. கனுவில் இது போன்ற மூலக குறிமுறைகளில் மாற்றங்கள் எளிதாக இருக்கும். கனுவில் மாற்றங்கள் செய்யும் திறமை உடையவர்கள் இல்லாமல் போகலாம். அதற்கு கனுவின் பரிமாறும் முறையைக் குறை கூற முடியாது. கனு உலகத்திலுள்ள எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்காது.

கணினி பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்குக் கைப்பிடித்து உதவ வேண்டியிருக்கும். அதாவது அவர்களுக்குச் செய்யத் தெரியாதவைகளைச் செய்து கொடுப்பது.

இது போன்ற சேவைகளை மட்டும் நிறுவனங்கள் அளிக்கலாம். மென்பொருள் மற்றும் சேவையை விரும்புபவர்கள், மென்பொருளை இலவசமாகப் பெற்றதால் இப்பொழுது சேவையை மட்டும் வாங்க விரும்புவார்கள். சேவை அளிக்கும் நிறுவனங்கள், தரத்திலும், சேவையிள் விலையிலும் போட்டியிடுவார்கள். மேலும், கணினி உபயோகிப்பவர்கள் ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்திருக்க வேண்டியிருக்காது. மேலும் சேவை வேண்டாமென்று நினைப்பவர்கள் நிரலுக்கான சேவை வாங்காமல் உபயோகிக்கலாம்.

“விளம்பரமின்றி மென்பொருளை விற்பனை செய்ய முடியாது.”

“விளம்பரம் செய்ய வேண்டுமென்றால், மென்பொருளுக்குக் காசு வசூலிக்க வேண்டும்.”

கனு போன்ற மென்பொருளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்கப் பல எளிமையான வழிகள் உள்ளன. ஆனால் கணினி உபயோகிப்பவர்களில் பலரை விளம்பரம் மூலம்தான் அணுக முடியும். அப்படியானால், கனுவை நகலெடுத்து விற்கும் நிறுவனங்கள் கனுவையும் விளம்பரப்படுத்தலாம். இதன்மூலம் விளம்பரத்திலிருந்து பயன் அடைபவர்கள் மட்டும்தான் அதற்குச் செலவு செய்வார்கள்.

பெரும்பாலானோர் கனுவை நண்பர்களிடம் இருந்து பெற்று இதுபோன்ற நிறுவனங்கள் வெற்றி அடையவில்லை என்றால், கனுவிற்கு விளம்பரம் தேவையில்லை என்று முடிவுசெய்யலாம்.(2)

“எனது நிறுவனம் மற்றவர்களோடு போட்டியிடுவதற்குத் தனியுரிம (proprietary) மென்பொருள் தேவை.”

கனு, இயங்குதள (Operating System) உலகத்தில் போட்டி இல்லாமல் செய்துவிடும். நீங்களோ உங்கள் போட்டியாளரோ இதில் எதையும் இழக்கவோ பெறவோ போவதில்லை. இருவரும் மற்ற துறைகளில் போட்டியிடுவீர்கள், ஆனால் இயங்குதளத் துறையில் ஒருவருக்கொருவர் உதவுவீர்கள். இயங்குதளங்களை விற்பது உங்கள் தொழிலாக இருந்தால், கனுவை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் அது உங்கள் கஷ்டம். உங்களது தொழில் வேறாக இருந்தால் கனு உங்களை இயங்குதளங்களை விற்கும் விலையுயர்ந்த வியாபாரத்திலிருந்து காப்பாற்றும்.

நான் எதிர்காலத்தில் கனுவின் முன்னேற்றத்திற்குப் பல நிறுவனங்களும், பயனாளர்களும் உதவி செய்து, ஒவ்வொருவரின் செலவைக் குறைப்பதைக் காண விரும்புகிறேன்.(3)

“நிரலாளர்கள் தங்களது படைக்கும் திறனிற்கு வெகுமதி பெறத் தகுதியற்றவர்களா?”

ஏதாவது ஒன்று வெகுமதி பெறத்தக்கது என்றால் அது சமுதாயப் பங்களிப்பே. படைக்கும் அறிவின் பலன் எவ்வளவு தூரம் சமுதாயத்திற்குத் தடையில்லாமல் கிடைக்கிறது என்பதைப் பொருத்தே அது சமுதாயப் பங்கா இல்லையா என்று கூற முடியும். நிரலாளர்கள் தங்களது புதுமையான நிரலாளர்களுக்கு வெகுமதி பெறத் தகுதியானவர்கள் என்றால், அதே கோணத்தில், அந்த நிரலியின் உபயோகிப்பதை அவர்கள் தடுத்தால் தண்டனைக்கு உண்டாகவும் தகுதியானவர்களே.

“ஒரு பயனாளர் தனது படைக்கும் திறனிற்கு வெகுமதி கேட்கக்கூடாதா?”

செய்த வேலைக்கு காசு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. தனது வருமானத்தை அதிகப் படுத்த நினைப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சேதம் விளைவிக்கும் வழிகள் உபயோகிக்கக்கூடாது. இன்றைய மென்பொருள் உலகத்தில் இது போன்ற சேதம் விளைவிக்கும் வழிகள்தான் உபயோகிக்கிறார்கள்.

ஒரு நிரலியை உபயோகிபவர்களுக்குத் தடை விதித்து காசைச் சுறண்டுவது சேதம் விளைவிக்கக்கூடியது. ஏனென்றால் இது போன்ற தடைகள், மென்பொருளை உபயோகிக்கக்கூடிய வாய்ப்புகளைக் குறைகிறது. இத்தடைகள், மனித இனம் அந்த நிரலியிடமிருந்து பெறக்கூடிய லாபத்தை குறைத்துவிடுகிறது.

ஒரு நல்ல குடிமகன் பணக்காரனாவதற்கு இது போன்ற நஷ்டத்தை விளைவிக்கும வழிகளை உபயோகிக்க மாட்டான். ஏனென்றால், எல்லோரும் இது போலச் செய்தால் நாம் எல்லோரும் அந்தப் பரஸ்பர சேதங்களால் ஏழைகளாகி விடுவோம். இதுதான் 'Kantian Ethics' அல்லது 'the Golden Rule'. தடைகள் விதிப்பதால் ஏற்படும் விளைவுகள் எனக்குப் பிடிக்காததால், நான் இதை யார் செய்தாலும் தவறு எனக் கருதுகிறேன்.

“நிரலாளர்கள் பட்டினியால் இறந்துவிட மாட்டார்களா?”

நிரல் எழுத, யாரும் கட்டாயப் படுத்தப்படவில்லை, என்று நான பதில் அளிக்கலாம். பலரால் தெருவில் வேஷம் போட்டு நின்று காசு சம்பாதிக்க முடியாது. இதனால் நாம் யாரும் தெருவில் வேஷம் போட்டு நின்று பசியால் செத்துப்போவதில்லை. நாம் வேறு ஏதாவது வேலை செய்கிறோம்.

ஆனால் அது தவறான பதில். ஏனென்றால் அது கேள்வியாளரின் அனுமானத்தை ஏற்றுகொள்கிறது: அதாவது மென்பொருளிற்கு உரிமையாளர் என்னும் நிலைமை இல்லாமல் நிரலாளர்களுக்கு ஒரு நயா பைசாக் கூடக் கிடைக்காது என்ற அனுமானத்தை ஏற்படுத்தும்.

நிரலாளர்கள் பட்டினியால் இறந்துவிடமாட்டார்கள், ஏனென்றால், இன்னமும், இன்றைய அளவிற்கு இல்லாவிடினும், அவர்களால் நிரல் எழுதி காசு சம்பாதிக்க முடியும்.

நகலெடுப்பதில் தடை விதிப்பது மட்டுமே மென்பொருள் வாணிகத்தின் அடிப்படையில்லை. ஆனாலும் அதனை அடிப்படையாகக் கொள்ளக் காரணம், அதனால் கிடைக்கும் பெரும் இலாபம்தான். வாடிக்கையாளர்கள் இவ்வடிப்படையை மறுத்தாலோ, தடை செய்தாலோ, தற்போது மிகவும் குறைந்த அளவில் பின்பற்றப்படும் பல வியாபார முறைகளுக்கு, இந்நிறுவனங்கள் தாவி விடும். எப்போதுமே, வியாபாரத்தை அமைக்க நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன.

இந்தப் புதிய முறைகளில், நிரலாளர் வேலைக்கு ஆடம்பரத் தோற்றம் இராது. அதற்காக இந்த மாற்றம் தேவையில்லை என்று வாதிடமுடியாது. கிளார்க்குகளின் ஊதியம் குறைவாக இருப்பதை நாம் அநியாயமாகக் கருதுவதில்லை. அதே அளவு ஊதியத்தைப் நிரலாளர்கள் பெறுவது அநியாயம் ஆகாது. (அப்பொழுதும் கூட, நடைமுறையில் நிரலாளர்கள் அதிகம் பெறுவார்கள்).

“நிரலாளர்களுக்குத் தங்களது சிருஷ்டிக்கும் அறிவை மற்றவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க உரிமை இல்லையா?”

“ஒருவரின் எண்ணங்களை மற்றவர்கள் உபயோகிப்பதில் அவருக்கு உள்ள அதிகாரம்” என்பது மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குகிறது; அது அவர்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலானதாக்குகிறது.

அறிவுச் சொத்து (Intellectual Property) பற்றித் தெளிவாகக் கற்றறிந்தவர்கள் (வழக்கறிஞர்கள் போன்றோர்), உண்மையில் அறிவுச் சொத்து அதிகாரம் என்பது இயற்கையான அதிகாரம் இல்லை என்று கூறுவர். அரசு ஒப்புக்கொள்ளும் அறிவுச் சொத்து அதிகாரங்கள், குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக, மசோதாக்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.

உதாரணமாக, கண்டுபிடிப்பாளர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை வெளியிட ஊக்குவிக்கும் வகையில் காப்புரிமை (patent system) உருவாக்கப்பட்டது. அதன் குறிக்கோள் சமுதாயம் பயன்பெற வேண்டும் என்பதுதான். அப்போது பதினேழு வருடம் என்பது தொழில்நுட்ப முன்னேற்ற வேகத்தோடு ஒப்பிட்டால் சிறிதாக இருந்தது (ஒரு காப்புரிமை பதினேழு வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்). காப்புரிமை என்பது பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் கவலை; அவர்களுக்கு விலையும், அனுமதி ஒப்பந்தங்களும் தயாரிப்பு கட்டுமானங்களை விட மிகச்சிறியது என்பதால் எந்தவித பாதிப்புமில்லை. அவை எந்தவொரு தனிமனிதனையும் காப்புரிமை செய்யப்பட்ட பொருளை உபயோகிப்பதைத் தடை செய்வதில்லை.

முற்காலத்தில் அச்சுரிமை (copyright) என்னும் ஒரு முறை கிடையாது. அப்பொழுது அடிக்கடி எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்பிலிருந்து தேவையான பகுதிகளை எடுத்து உபயோகித்தார்கள். இந்தப பழக்கம் பல எழுத்தாளர்களுக்கு நன்மை விளைவித்தது. இந்தப் பழக்கத்தால்தான் இன்னமும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் நம்மிடையே நிலைத்திருக்கின்றன. புத்தகங்கள் எழுதுவதை ஆதரிப்பதற்காகத்தான் அச்சுரிமை உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்டது புத்தகங்களுக்காக. புத்தகங்களைச் சிக்கனமாக அச்சகத்தில்தான் நகல் செய்ய முடிந்தது. இதனால் வாசகர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

எல்லா அறிவுச்சொத்து அதிகாரங்களும் சமுதாயத்தின் பொதுநலம் கருதி, சமுதாயத்தால் அளிக்கபட்ட உரிமங்கள் தான். ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும், நாம் கேட்கவேண்டியது: இது போன்ற உரிமங்களைக் கொடுப்பது நமக்கு பயன் அளிக்கின்றதா? என்ன மாதிரி அதிகாரங்களுக்கு நாம் உரிமம் அளிக்கிறோம்?

தற்கால நிரலாளர்களின் நிலை, நூறு வருடங்களுக்கு முன்புள்ள புத்தகங்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. ஒரு நிரலை ஒருவரிடம் இருந்து ஒருவர் எளிதாக நகல் எடுப்பது, ஒரு நிரலின் இலக்கு நிரல் (Object code) மற்றும் மூலக் குறிமுறைகள் வேறு வேறாக இருப்பது, ஒரு நிரலை வாசித்து மகிழ்வதைக் காட்டிலும் அதனை உபயோகப்படுத்துவது, இவையெல்லாம் இணைந்து அந்த நிரலியின் உரிமையாளர் அச்சுரிமையை அமல்செய்யும் பொழுது மனதளவிலும் பொருளளவிலும் சமுதாயத்தைச் சீரழிக்கும் சூழ்நிலையை உருவாக்குகின்றன; அந்தச் சூழ்நிலையில் சட்டம் அனுமதித்தாலும் கூட அவர் அதைச் செய்யக்கூடாது.

“போட்டியே ஒரு செயல் சிறப்பாகச் செயல்பட உறுதுணையாயிருக்கும்.”

போட்டிக்கு ஒரு சிறந்த உதாரணம் ஓட்டப்பந்தயம். வெற்றி பெறுவோர்க்கு பரிசளிப்பதன் மூலம் நாம் எல்லோரையும் வேகமாக ஓட ஊக்கமளிக்கிறோம். ஓடுகிறவர், எதற்காகப் பரிசு வழங்கப்படுகிறது என்பதை மறந்துவிட்டு, வெற்றி இலக்கை மட்டுமே குறிவைத்து ஓடினால், அவர் பிற போட்டியாளர்களைச சமாளிப்பதற்குப் பல தந்திரங்களைக் கையாளக்கூடும் - உதாரணமாக, மற்ற போட்டியாளர்களைத் தாக்குவது. ஒருவேளை போட்டியாளர்கள் கைச்சண்டையில் ஈடுப்பட்டார்களேயானால் அவர்கள் எல்லோரும பின்தங்க வேண்டிய நிலை வரும்.

தனியுரிமை (proprietary) மென்பொருள மற்றும் இரகசிய மென்பொருள் இரண்டும், கைச்சண்டையிடும் போட்டியாளர்களுக்கு ஒப்பான உதாரணங்களாகும். கவலைக்குரியது என்னவென்றால், நம்மிடம் இருக்கும் ஒரே நடுவரும் சண்டையை நெறிபடுத்துகிறாரே தவிர தடுப்பதில்லை (ஒவ்வொரு 10 அடிக்கும் ஒரு குத்து குத்தலாம்). ஆனால் அவர் உண்மையில் சண்டையை நிறுத்தி அதற்குக் காரணமான போட்டியாளர்களைத் தண்டிக்க வேண்டும்.

“ஊக்கத்தொகை இல்லாததால் நிரலாளர்கள் நிரல் எழுதுவதை நிறுத்திவிடமாட்டார்களா?”

வாஸ்தவமாக, எந்தவிதமான ஊக்கத்தொகையும் எதிர்பாராமல் பலர் நிரல் எழுதுவார்கள். பொதுவாக நிரல் எழுதுவதில் மிகச்சிறந்தவர்களுக்கு அதில் தவிர்க்க முடியாத மோகம் உள்ளது. சங்கீதத்தின் மூலம் வாழ்க்கையை நடத்தும் கட்டாயம் இல்லாவிட்டாலும் கூட, பல சங்கீத மேதைகளுக்குச் சங்கீதத்தில் உள்ள ஈடுபாடு குறைவதில்லை.

இந்தக் கேள்வி பலர் மத்தியில் எழுந்தாலும், இது சரியான கேள்வி கிடையாது. ஏனென்றால், நிரலாளர்களுக்கு ஊதியம் குறையுமே தவிர மறைந்துவிடாது. அதனால், சரியான கேள்வி என்னவென்றால், குறைந்த ஊக்கத்தொகையை நிரலாளர்கள் ஏற்பார்களா? அவர்கள் ஏற்பார்கள் என்று எனது அனுபவம் சொல்கிறது.

பத்து வருடங்களுக்கு மேலாக உலகத்தின் தலை சிறந்த நிரலாளர்கள் MITயின் AI ஆய்வகத்தில் எங்கும் கிடைத்திராத மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றினர். அவர்களுக்கு ஊதியத்தைத் தவிர மற்ற ஊக்க விருதுகள் கிடைத்தன. உதாரணத்திற்குப் புகழ் மற்றும் பாராட்டு. மேலும், படைப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடியது, அதுவே ஒரு விருதாகும்.

பின்னர், கூடுதல் ஊதியத்திற்கு இதே மாதிரி வேலையைச் செய்ய வாய்ப்பு கிடைத்ததால் பலர் வெளியேறினர்.

நிரலாளர்கள் பணத்தைத் தவிர மற்ற காரணதிற்காகவும் நிரல் எழுதுவார்கள் என்பதை இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. குறைந்த ஊதியத்தை அளிக்கும் கூட்டமைப்புகள், அதிக ஊதியத்தை அளிக்கும் அமைப்புகளுடன் போட்டியிடத் திணறுகின்றனர். ஆனால், அதிக ஊதியத்தை அளிக்கும் அமைப்புகள் ஒடுக்கப்பட்டால், அவர்கள மோசமாக செயல்பட வேண்டியதில்லை.

“எங்களுக்கு நிரலாளர்கள் மிகவும் தேவை. நாங்கள் பிறருக்கு உதவக் கூடாது என்று நிரலாளர்கள் வாதிட்டால், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

இது போன்ற வாதங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவிற்கு உங்கள் நிலைமை எப்பொழுதும், மோசமாக இருக்காது. நினைவில் கொள்ளுங்கள்: கப்பம் கட்டுவதைவிட விடுதலைக்காகப் போராடுவதே சிறந்தது!

“நிரலாளர்கள் எப்படியாவது வாழ்க்கையை நடத்த வேண்டுமே.”

புதிய முறையை ஏற்றுக்கொண்ட பிறகு, தொடக்கத்தில் இது உண்மையாக இருக்கும். எனினும் நிரலாளர்கள் நிரலியின் உரிமத்தை விற்பதைத் தவிர வேறு பல வழிகளின் மூலம் வாழ்க்கையை நடத்தலாம். உரிமத்தை விற்பது இப்போது வழக்கமாக உள்ளது, ஏனென்றால், அது அதிகமான லாபத்தைத் தரக்கூடியதே தவிர, அது நிரல்கள் மூலம் சம்பாதிப்பதற்கு ஒரே வழி கிடையாது. மற்ற வழிகள் தேடினால் எளிதாகக் கிடைக்கும். இதோ சில எடுத்துக்காட்டுகள்.

கணினி தயாரிப்பாளர்கள் புது கணினியை அறிமுகப்படுத்தும் பொழுது, அந்தக் கணினியில் இயங்குதளங்களை இயங்கவைப்பதற்கு நிரலாளர்களுக்குக் காசு கொடுப்பார்கள்.

நிரலியைக் கற்பிப்பதும், பராமரிப்பதும நிரலாளர்களுக்கு உத்தியோகம் அளிக்கலாம்.

புதிய எண்ணங்களை உடையோர் தங்களது நிரலை இலவசமாகக் கொடுத்து, திருப்தி அடைந்தவர்களிடமிருந்து நன்கொடைகள் கேட்கலாம். இது போல வெற்றிகரமாக வழி நடத்துபவர்களை நான் சந்தித்துள்ளேன்.

சம்பந்தப்பட்ட தேவைகளை உடையோர் குழுக்கள் அமைத்து சந்தா கட்டலாம். அந்தக் குழுக்கள் நிரல் எழுதும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்து அவர்களுக்குத் தேவையான நிரல்களை எழுதலாம்.

எல்லா விதமான மென்பொருள் தயாரிப்பிற்கும் மென்பொருள் வரி மூலம் நிதி திரட்டலாம்

கணினி வாங்கும் ஒவ்வொருவரும் அதன் விலையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மென்பொருள் வரியாகக் கட்ட வேண்டும்.

கணினி வாங்குபவர் தானாகவே மென்பொருள் தயாரிப்பிற்கு நன்கொடைகள் கொடுக்கிறார் என்றால, அவர் வரி கட்ட வேண்டியதில்லை. அவர் அவருக்கு விருப்பமான செயல்திட்டத்திற்கு நன்கொடை கொடுக்கலாம. அவர் நன்கொடை கொடுத்த அளவிற்கு வரி கட்டத் தேவையில்லை.

மொத்த வரியின் சதவீதத்தை வரி கட்டுபவர்களின் வாக்களிப்பின் மூலம் தீர்மானம் செய்யலாம்.

இதன் விளைவுகள்:

காலப்போக்கில், தேவைகளுக்காக மிகக்கடினமாக யாரும் உழைக்கத் தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவதற்குச் சுதந்திர மென்பொருள், ஒரு முதற்படியாக இருக்கும். மக்கள், ஒரு வாரத்தில், பத்து மணி நேரங்களில் தங்கள் தினசரி வேலைகளை முடித்து விட்டு, மற்ற நேரங்களை, மென்பொருள் தயாரித்தல் போன்ற கேளிக்கைகளில் செலவிடலாம். மென்போருள் தயாரித்து வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியம் இருக்காது.

ஏற்கனவே, தேவையான உற்பத்திக்குச் சமுதாயம் செய்யவேண்டிய வேலைப்பளுவை நாம் முடிந்தமட்டும் குறைத்து விட்டோம். ஆனால், இவற்றில் சிறிதளவே தொழிலாளர்கள விரும்பிச் செய்வதாக மாற்றமடைந்துள்ளது. ஏனென்றால் உற்பத்தித் திறன் மிகுந்த செயல்களுக்கு அதிக அளவில் உற்பத்தித் திறனற்ற செயல்கள் தேவப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் அதிகாரத்துவமும் போட்டிகளினால் ஏற்படும் தொய்வும் ஆகும். மென்பொருள் உற்பத்தியில் இதுபோல வீணாகும் உழைப்புகளைச் சுதந்திர மென்பொருள் முடிந்த மட்டும் குறைத்துவிடும். உற்பத்தித்திறனில் தொழில்நுட்ப இலாபம் பெற்று அதை நமக்குக் குறைந்த விலையாக்கிட நாம் இதைச் செய்தாக வேண்டும்.

பின்குறிப்புகள்

  1. இது போன்ற பல நிறுவனங்கள் இப்போது உள்ளன.
  2. தளையறு மென்பொருட்கள் அமைப்பு (Free Software Foundation) ஒரு நிறுவனத்தைப் போல் அல்லாமல் அறக்கட்டளையாக இருந்தாலும் தனக்கான நிதியை பெரும்பாலும் விநியோகச் சேவையின் மூலமாகத்தான் ஈட்டுகிறது. ஒருவேளை *யாரும்* FSFல் இருந்து நகல்களைப் பெறவில்லை என்றால் இவ்வமைப்பு இயங்க முடியாமல் போகலாம். அதற்காக உரிமக் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு பயனாளரையும் வாங்கச் சொல்லி சாந்தப்படுத்தும் என்பதாகாது. உலகப் பயனாளர்களில் ஒரு சிறிய பங்கினர் FSF இடம் நகல்களை வாங்கினாலே போதும். FSF சீராக இயங்கும். எனவே பயனாளர்கள் இந்த வழியில் எங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம். நீங்கள் உங்கள் பங்களிப்பைத் தந்துவிட்டீர்களா?
  3. சமீபத்தில் கணினி நிறுவனங்களில் ஒரு சாரார் GNU C compilerஐப் பராமரிக்க நிதியை அள்ளிக் கொடுத்துள்ளனர்.