This translation may not reflect the changes made since 2008-04-10 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

காபிலெப்ட் என்றால் என்ன?

நிரலாக்கம் உள்ளிட்ட பிற பணிகளை கட்டற்று இருக்கும் படிச் செய்தற்கான பொதுவான முறை காபிலெப்ட் ஆகும். இங்ஙனம் படைக்கப்பட்டவற்றிலிருந்து மாற்றம்பெற்ற விரிவாக்கம் பெற்ற அனைத்தும் கட்டற்று இருத்தல் அவசியம்.

நிரலொன்றை கட்டற்றதாக்குதற்கான எளிய வழி அதனைப் பதிப்புரிமம் இழக்கச் செய்து பொதுவுடைமையாக்குவது. இது மக்கள் தாங்கள் விரும்புகிற பட்சத்தில் அவற்றின் மீது செய்யப்பட்ட மாற்றங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூட்டுறவாட விரும்பாத சிலர் நிரலை தனியுரிம மென்பொருளாக ஆக்குவதற்கும் இது வழி வகைச் செய்கிறது. அவர்கள் விரும்புகின்ற அளவிற்கு சிறிய அல்லது பெரிய அளவில் மாற்றங்களைச் செய்து தனியுரிம மென்பொருளாக வெளியிட அனுமதிக்கிறது. இத்தகைய மென்பொருளை பெறுவோர் அம்மென்பொருளின் பிரதான ஆசிரியர் எத்தகைய சுதந்தரத்தை வழங்கினாரோ அதனைப் பெறாதபடிக்கு ஆகிறது. இடையே வந்தவர் அதனைப் பறித்துக் கொண்டார்.

குனு திட்டத்தில் எங்கள் இலக்கு அனைத்து பயனர்களுக்கும் குனு மென்பொருளை மாற்றுதற்கும் மறுவிநியோகம் செய்தற்குமான சுதந்தரத்தினை வழங்குவது. இடைப்பட்ட ஒருவர் சுதந்தரத்தைப் பறிக்க இயலுமாயின் சுதந்தரத்தினைப் பெற இயலாத பல பயனர்கள் இருக்கும் படி நேரலாம். ஆகையால் குனுவினை பொதுவுடைமையாக்குதற்கு பதிலாக நாங்கள் காபிலெப்ட் செய்கிறோம். மென்பொருளினை மாற்றியோ மாற்றாதவாரோ மறுவிநியோகம் செய்யும் ஒருவர் அதனை மாற்றவும் மறுவிநியோகம் செய்யவும் அனுமதியும் சுதந்தரத்தினோடு அங்ஙனம் செய்தல் வேண்டும் என காபிலெப்ட் பகர்கிறது. அனைத்து பயனரும் சுதந்தரத்தினைப் பெற்றிடுவதை காபிலெப்ட் உறுதிசெய்கிறது.

கட்டற்ற மென்பொருளோடு இணைத்துக் கொள்வதற்கு ஏனைய நிரலாளர்களுக்கும் காபிலெப்ட் ஒரு ஊக்கத்தினைத் தருகிறது. குனு சி++ ஒடுக்கி முதலிய முக்கிய மென்பொருட்கள் இருப்பதற்கும் இதுவே முக்கியக் காரணம்.

கட்டற்ற மென்பொருள் ஒன்றினை மேம்படுத்த விழைவோர் அங்ஙனம் செய்தற்கு உரிய அனுமதியினைப் பெற்று பங்களிக்கச் செய்யவும் காபிலெப்ட் உதவுகிறது. இத்தகைய நிரலாளர்கள் பெரும்பாலும் கூடுதற் பணம் ஈட்டும் பொருட்டு எதையும் செய்யத் துணியும் நிறுவனங்களுக்காகவும் பல்கலைக்கழகங்களுக்காகவும் பணியாற்றுபவராக இருப்பர். தங்களது மாற்றங்களை சமூகத்திற்கு அர்ப்பணித்திட நிரலாளர் விரும்புவார். ஆயினும் அவரது நிறுவனமோ மாற்றங்களைக் கொண்டு ஒரு தனியுரிம மென்பொருளை ஆக்கிட நினைக்கும்.

நாங்கள் நிறுவனத்திடம் மென்பொருளை கட்டற்று வெளியிடாது போனால் அது சட்டப்படி தவறு என எடுத்திரைத்த பின்னர் இறுதியாக அவர்களும் அதனை விரயப்படுத்தடவும் விரும்பாது கட்டற்ற மென்பொருளாக வெளியிடுவர்.

நிரலொன்றை காபிலெப்ட் செய்ய முதற்கண் அதனைப் பதிப்புரிமம் பெற்றதாக அறிவித்து அதனை வழங்குதற்கான விதிகளில், வழங்குதற்கான விதிகள் மாற்றப்படாத பட்சத்தில், நிரற் மூலத்தையோ அல்லது அதிலிருந்து தருவிக்கப்பட்ட எந்தவொரு நிரலையோ அனைவரும் பயன்படுத்த, மாற்ற மற்றும் மறுவிநியோகம் செய்ய அனைவருக்கும் உரிமம் உண்டு எனத் தெரிவிப்பது வழக்கம். இது சட்டபூர்வமானக் கருவியுமாகிறது. இங்ஙனம் நிரலும் சுதந்தரங்களும் பிரிக்க முடியாதவையாகின்றன.

தனியுரிம நிரலாக்க நிறுவனங்கள் பதிப்புரிமமாகிய காபிரைட்டை பயனர்களது சுதந்தரத்தை பிடுங்க பயன்படுத்துகின்றனர். நாங்கள் காபிரைட்டை சுதந்தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப் பயன்படுத்துகிறோம். எனவேதான் காபிரைட்டை காபிலெப்ட் எனத் திருத்தி பயன்படுத்துகின்றோம்.

காபிலெப்ட் பொதுவானதொரு கருத்தாக்கம் ஆகும். பல்வேறு விதங்களில் விவரங்களை சேர்க்கலாம். குனுத் திட்டத்தைப் பொறுத்த மட்டில் நாங்கள் பயன்படுத்தும் வழங்குதற்கான குறிப்பிட்ட உரிமைகள் குனு பொது மக்கள் உரிமத்தில். குனு பொது மக்கள் உரிமம் பொதுவாக குனு ஜிபிஎல் என வழங்கப்படுகிறது. குனு ஜிபிஎல் குறித்த கேள்வி பதில் பக்கமொன்றும் கிடைக்கப் பெறுகிறது. கமெஅ ஏன் பங்களிப்பாளர்களிடமிருந்து பதிப்புரிம ஒப்புமை பெறுகிறது என்பது குறித்த பக்கத்தையும் தாங்கள் வாசித்தறியலாம்.

காபிலெப்டின் மற்றொரு வடிவமான குனு குறை பொது மக்கள் உரிமம் (எல்ஜிபிஎல்) சில குனு நிரலகங்களுக்கு பொருந்தும். எல்ஜிபிஎல் பயன் படுத்துவது தொடர்பாக அறிய தங்களின் அடுத்த நிரலகத்திற்கு தாங்கள் ஏன் குறை ஜிபிஎல் பயன்படுத்தக் கூடாது எனும் கட்டுரையை வாசிக்கவும்.

குனுவின் கட்டற்ற ஆவணமாக்க உரிமம் (எப்டிஎல்) கையேடுகள், உரைப் புத்தகங்கள் அல்லது ஏனைய ஆவணங்களுடன் பயன்படுத்தத் தக்க காபிலெப்டின் வடிவமாகும். இது அனைவருக்கும் மாற்றமில்லாதோ மாற்றத்துடனோ, இலாபநோக்கத்திற்கோ இலாபநோக்கமற்றோ, நகலெடுக்க மறுவிநியோகம் செய்யத் தேவையான உத்தரவாதத்தை அனைவருக்கும் அளிக்கிறது.

பல்வேறு கையேடுகளில் அவற்றிற்குரிய உரிமம் இணைக்கப்பட்டுள்ளதோடு பிரதியொரு குனு மூல நிரல் வழங்கல்களிலும் உள்ளடக்கப் படுகிறது.

தாங்கள் தான் பதிப்புரிமைதாரர் என அனுமானித்துக் கொண்டு இவ்வுரிமங்கள் அனைத்தையும் தங்களது வேலைப்பாடுகளுக்கும் பொருத்தலாம். இதனைச் செய்தற் பொருட்டு தாங்கள் உரிமத்தினை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. உரிமத்தின் நகலொன்றை தங்கள் பணிகளில் உள்ளடக்கி மூலக் கோப்புகளில் உரிமத்தினை ஒழுங்காகச் சுட்டும் குறிப்புகளைத் தரவும்.

பல்வேறு நிரல்கட்டு ஒரே மாதிரியான வழங்கு விதிகளை பயன்படுத்துவது பல்வேறு நிரல்களினிடையே நிரல் மூலங்களை நகலெடுத்துப் பயன்படுத்த துணைபுரியும். இவையனைத்தும் ஒரே வழங்கற் விதிகளை பயன்படுத்துவதால் இவற்றின் கூறுகள் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றனவா என சரிபார்க்க வேண்டிய கட்டாயமில்லை. குறை ஜிபிஎல் வழங்கற் விதிகளை ஜிபிஎல்லாக மாற்ற தன்னகத்தே விதிகளைக் கொண்டு விளங்குகின்றது. இதன் மூலம் இதனுள் இருக்கும் நிரலை ஜிபிஎல்லால் கவரப் பெற்ற நிரலொன்றிற்கு தாங்கள் நகலெடுக்க இயலும்.

தங்களது நிரலினை குனு ஜிபிஎல் கொண்டோ குனு குறை ஜிபிஎல் கொண்டோ காபிலெப்ட் செய்ய விழைந்தால் உரிமங்கள் விவரப் பக்கத்தின் துணையினை நாடவும். எங்களது உரிமமொன்றினைத் தாங்கள் பயன்படுத்த விழைந்தால் அதன் முழு உரையையும் அப்படியே தாங்கள் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொன்றும் அதனதனுள் முழுமையானவை. அவற்றின் பூர்த்தியில்லா அரைகுறை பகுதிகளைப் பயன்படுத்த அனுமதியில்லை.

தங்களது ஆவணத்தினை குனு எப்டிஎல் கொண்டு காபிலெப்ட் செய்ய விரும்பினால், எப்டிஎல் உரையின் இறுதிப் பகுதியில் உள்ளவற்றையும் ஜிஎப்டிஎல் குறிப்புகள் பக்கத்தையும் நாடவும். மீண்டும் பூர்த்தியில்லா அரைகுறை பகுதிகளைப் பயன்படுத்த அனுமதியில்லை.