This translation may not reflect the changes made since 2014-03-14 in the English original.

You should take a look at those changes. Please see the Translations README for information on maintaining translations of this article.

மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும்குனு திட்டம்

ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்

நிலக் கண்ணி வெடிகளுக்கு ஒப்பான மென்பொருள் திட்டங்கள் தான் மென்பொருள் படைப்புரிமம். வடிவமைப்பின் ஒவ்வொரு படியும் ஒரு படைப்புரிமத்தில் காலடி எடுத்து வைக்கக் கூடிய வாய்ப்புகளை சுமந்து நிற்கின்றன.இது தங்களின் திட்டத்தையே பாழடித்துவிடும்.

பெரிய சிக்கலான நிரலை இயற்றுவதென்றால் பலச் சிந்தனைகளை, பெரும்பாலும் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான சிந்தனைகளை, ஒன்றிணைப்பதாகும். மென்பொருள் படைப்புரிமத்தினை அனுமதிக்கும் ஒரு நாட்டில் , தாங்கள் வரைந்த நிரலின் ஒரு பகுதிக்கான தங்களின் சிந்தனையின் ஒரு துளிக்கு ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் படைப்புரிமம் பெற்றிருக்கும். சொல்லப் போனால் நூற்றுக் கணக்கான படைப்புரிமங்கள் தங்கள் நிரலின் பகுதியை உள்ளடக்கியிருக்கும். 2004 ம் ஆண்டின் ஒரு ஆய்வுப் படி முக்கியமான நிரலொன்றின் பல்வேறு பாகங்கள் கிட்டத் தட்ட 300 யு.எஸ் படைப்புரிமங்களில் இடம் பெற்றிருந்தன. ஒன்றே ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறிய எவ்வளவு பெரிய ஆய்வு.

தாங்கள் மென்பொருளினை உருவாக்குபவரானால், குறிப்பிட்ட எந்தவொரு நேரத்திலும் தாங்கள் ஒரு படைப்புரிமத்தால் அச்சுறுத்தப் படுவீர்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இது நிகழும் போது, இந்த படைப்புரிமத்தை மறுத்துரைப்பதற்கான சட்டரீதியான சாத்தியக் கூறுகளை தங்களால் கண்டெடுக்க முடிந்தால், பலிகடா ஆகாமல் தங்களால் தங்களைக் காத்துக் கொள்ள இயலும். தாங்கள் அத்தகைய முயற்சியினை மேற்கொள்ளலாம். ஒரு வேளை வெற்றிப் பெற்றால், கண்ணி வெடிகளால் நிரப்பப் பட்ட வயலொன்றில் ஒன்றே ஒன்றைத் தாண்டியதாகவே ஆகும். இந்தப் படைப்புரிமம் உண்மையாகவே பொது நலத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்குமாயின், பொதுமக்களுக்கான படைப்புரிம அறக்கட்டளை (pubpat.org) இவ்வழக்கினை எடுத்து நடத்தலாம். இது தான் அதன் சிறப்பம்சம். படைப்புரிமம் ஒன்றினை மறுத்துரைக்கும் சாட்சியமாக, ஒத்த சிந்தனையொன்று ஏற்கனவே பதிப்பிக்கப் பட்டிருக்கின்றதா எனத் தாங்கள் கணினியினை பயன்படுத்தும் சமூகத்தினைக் கேட்டால் , எங்களிடன் இருக்கக் கூடிய பயனுள்ளத் தகவல்களையெல்லாம் திரட்டி நாங்கள் தரவேண்டும்.

கொசு அடிக்க உதவும் கருவியால் எவ்வாறு மலேரியாவினை ஒழிக்க முடியாதோ அதேபோல், ஒவ்வொரு படைப்புரிமத்திற்கு எதிராக போராடுவதென்பதும் மென்பொருள் படைப்புரிமத்தின் பாதகங்களை அகற்ற அறவே உதவாது. பதிவொளி விளையாட்டில் வரும் இராட்சதர் ஒவ்வொருவரையும் கொல்வதென்பது எப்படி எதிர்பார்க்க இயலாதோ அதேபோல், தங்களை நோக்கி வரும் ஒவ்வொரு படைப்புரிமத்தினையும் தாங்கள் வீழ்த்துவீர்கள் எனவும் எதிர்பாக்க முடியாது. விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ ஒரு படைப்புரிமம் தங்களின் நிரலை நாசம் செய்யப் போகின்றது. யு.எஸ் படைப்புரிம அலுவலகம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட இலட்சம் மென்பொருள் படைப்புரிமங்களை வழங்குகின்றது. நமது தலைச் சிறந்த முயற்சிகளால் கூட இக்கண்ணிவெடிகளை அவை விதைக்கப் படும் வேகத்துக்கு ஈடுகொடுத்து களைய இயலாது.

இவற்றுள் சில வெடிச் சுரங்கங்கள் அகற்றவே இயலாதவை. எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் தீமையானது. மேலும் ஒவ்வொரு மென்பொருள் படைப்புரிமமும் தாங்கள் தங்களின் கணினியினை பயன்படுத்துவதை அநியாயமாகக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால் படைப்புரிம அமைப்பின் விதிகளின் படி எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் சட்டப்படி செல்லத் தக்கவையே. படைப்புரிம விதிகள் சரியாக அமல்படுத்தப் படாத, “தவறுகளால்” விளைந்த படைப்புரிமங்களையே நம்மால் வெல்ல முடியும். மென்பொருள் படைப்புரிமத்தை அனுமதிப்பது எனும் கொள்கைதான் தொடர்புடைய ஒரே தவறு என்கிற போது நம்மால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.

கோட்டையினை பாதுகாக்க, தோன்ற தோன்ற இராட்சதர்களைக் கொல்வதைக் காட்டிலும் அதிகம் செய்யவேண்டும். அதனை உற்பத்திச் செய்யும் பாசறையினையே துடைத்தெரிய வேண்டும். இருக்கக் கூடிய மென்பொருள் படைப்புரிமங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழிப்பது நிரலாக்கத்தை பாதுகாக்காது. படைப்புரிமமானது இனியும் மென்பொருள் உருவாக்குவோரையும் பயனர்களையும் அச்சுறுத்தாது இருக்க, நாம் படைப்புரிம முறையையே மாற்ற வேண்டும்.

இவ்விரு வாதங்களுக்கும் இடையே முரண்பாடெதுவும் இல்லை. நாம் குறுகிய கால விடுதலைக்கும் நீண்ட கால நிரந்தர தீர்வுக்கும் உடனடியாக பணியாற்றத் துவங்கலாம். கவனம் கொடுக்கத் துவங்கினோமேயானால், தனிப்பட்ட மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக பணிபுரியும் அதே நேரத்தில், பிரச்சனையை முழுமையாகக் களைவதற்குத் தேவையான ஆதரவினைத் திரட்டும் இரட்டிப்பு வேலையையும் செய்ய இயலும். முக்கியமான விடயம் யாதெனில் “தீயதான ” மென்பொருள் படைப்புரிமங்களைச் செல்லுபடியாகாத அல்லது தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட படைப்புரிமங்களோடு ஒப்பிடுவது. மென்பொருள் படைப்புரிமமொன்றினை வலுவிழக்கச் செய்யும் ஒவ்வொரு முறையும், முயற்சி செய்வதற்கான நமது திட்டங்கள் பற்றிப் பேசுகிற ஒவ்வொரு முறையும்,“ஒரு படைப்புரிமத்தின் குறைவு, நிரலாளர்களின் அச்சுறுத்தல்களில் ஒன்று குறைவு. நமது இலக்கோ படைப்புரிமமே இல்லாத நிலை” என நாம் உறுதியாகச் சொல்ல வேண்டும்.

மென்பொருள் படைப்புரிமத்துக்கெதிரான போரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்துக்கு முன்னால் ஐரோப்பிய பாராளுமன்றம் மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக உறுதியாக வாக்களித்தது. மே மாத வாக்கில் பாராளுமன்றத்தின் மாற்றங்களை அமைச்சர் குழு இல்லாது செய்ய வாக்களித்து துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்னும் மோசமடையச் செய்து விட்டது. ஆயினும், இதனை ஆதரித்த ஒரு நாடு, தற்பொழுது தனது வாக்கினை மாற்றிக் கொண்டு விட்டது. நாம் எப்பாடு பட்டாவது இன்னும் ஒரு ஐரோப்பிய நாட்டினை, தமது வாக்கினைத் திரும்பப் பெறச் செய்யுமாறு திருப்தி படுத்த வேண்டும். மேலும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள புதிய உறுப்பினர்களை திருப்தி படுத்தி முந்தைய வாக்கிற்கு ஆதரவளிக்கும் படிச் செய்ய வேண்டும். எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் ஏனைய இயக்கத்தினருடன் தொடர்புக் கொள்ளவும் www.ffii.org னை அணுகவும்.